"நீ எங்க ஏறுன.. எங்க இறங்குன.. தெரிஞ்சி தான் வந்திருக்கோம்" - போலீசுக்கே விபூதி அடிக்க நினைத்த பெண்
புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி-விஜயலட்சுமி, கடற்கரையில் பலூன் விற்கும் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில், புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை, திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி கேமாரக்களை ஆய்வு செய்தபோது, 2 பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்புவது தெரியவந்தது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில், குழந்தையுடன் ஒரு பெண்ணை காரைக்கால் சாணக்கரை தெரு பகுதியில் இறக்கிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரைக்கால் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயன்றுள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே, அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.