உலகம் முழுவதும் நெட்வொர்க்.. அதிரவைக்கும் கால் சென்டர் மோசடி.. வசமாக சிக்கிய கும்பல்..!

x

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என முகநூலில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் கோகிலா. அரசு ஊழியரான இவர், முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் டிரேடிங்கில் சுமார் 18 லட்சம் வரை முதலீடு செய்திருக்கிறார். இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோகிலா, சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், பெங்களூர் மற்றும் நெய்வேலியில் கால் செண்டர் வைத்திருப்பவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, நெய்வேலி மற்றும் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஐவரை கைது செய்த போலீசார், அனைவரையும் புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் துபாயை தலைமை இடமாகக் கொண்டு.. இந்தியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் கால் சென்டர்கள் வைத்து ஐவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 200க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டதையும், இதில் 64 வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, ஐவரிடம் இருந்து 4 சொகுசு கார், ராயல் என்ஃபீல்ட் புல்லட், ஒரு வேன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கணிணிகள், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அனைவரையும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்