போராடி கரம்பற்றிய காதல் ஜோடி... ரூமுக்குள் சென்றதும் அலறல்... உள்ளே ரத்த வெள்ளத்தில் புதுமண தம்பதி
காதல் திருமணம் செய்த சில மணி நேரத்தில் புதுமணத் தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் கொடூரமாக குத்திக் கொண்ட சம்பவம் கர்நாடகாவையே கலங்கடித்துள்ளது... என்ன நடந்தது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
கோலார் தங்கவயல்... செம்பரகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த நவீன் குமார் - லிகிதா ஸ்ரீ காதல் ஜோடி...
பல ஆண்டுகள் ஆசை ஆசையாய் காதலித்த இவர்கள்... வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதால் மகிழ்ச்சியாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்...
ஆண்டர்சன்பேட்டையில் உள்ள மண்டபம் ஒன்றில் கொண்டாட்டமாக திருமணமும் அரங்கேறியது...
முறைப்படி மணமகன் வீட்டிற்கு வந்த நிலையில்... அங்கு கொஞ்ச நேரம் அனைவருடனும் கலகலப்பாக சிரித்து... பேசி மகிழ்ந்துள்ளனர்...
கல்யாண களைப்பில் இருந்த நவீன் குமாரும் லிகிதா ஸ்ரீயும் பிற்பகல் நேரத்தில் படுக்கையறைக்கு ஓய்வெடுக்கச் சென்றதாகத் தெரிகிறது...
திடீரென பார்த்தால் உள்ளே பயங்கரமான சத்தம்... நவீன் குமாருக்கும் லிகிதாவுக்கும் கடும் சண்டை... வாய்த்தகராறு... நீயா நானா என மாற்றி மாற்றி திட்டிக் கொண்டுள்ளனர்.
வாய்த்தகராறு வன்முறையாக மாறி... இருவரும் மாறி மாறி கத்தியால் சரமாரியாக குத்திக் கொண்டனர்...
அவ்வளவு நேரம் களேபரமாக இருந்த அறை... அடுத்த சில நிமிடங்களில் மயான அமைதியானது...
படுக்கையறை உள்ளே தாழிடப்பட்டிருந்ததால், வெளியில் இருப்பவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை...
சண்டை போட்ட போது கூட அதிகரிக்காத பதற்றம் இருவரும் அமைதியானவுடன் அதிகரித்து பொறுமை இழந்து கதவை உடைத்துக் கொண்டு உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தால் நவீனும் லிகிதாவும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
பதறிப்போன உறவினர்கள் இருவரையும் மருத்துவமனை கொண்டு சென்றபோது, வழியிலேயே பிரிந்து விட்டது லிகிதா ஸ்ரீயின் உயிர்... இதனிடையே மருத்துவமனையில் நவீன்குமாரும் சிகிச்சை பலனின்றி பலியானார்...
சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில்... கல்யாண வீடு கண்ணீர் கடலாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...