"அனைவர் இதயங்களிலும் ராமர் குடிகொண்டுள்ளார்"...பிரதமர் மோடி கருத்து
ஆண்டின், முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டை 2024 குறிப்பதாகத் தெரிவித்தார். அரசமைப்பின் 3வது அத்தியாயத்தில், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளதுடன், ராமர், சீதை மற்றும் லட்சுமணரின் புகைப்படங்களுக்கு இடமளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அயோத்தி பிராண பிரதிஷ்டை நிகழ்வு கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைத்துள்ளதாக தெரிவித்த பிரதமர், அனைவரது இதயங்களிலும் ராமர் குடிகொண்டிருப்பதாகக் தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழா மிகச்சிறப்பாக இருந்ததாகவும், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் போலீஸ் படையை சேர்ந்த மகளிர் அணிவகுப்பு மற்றும் பெண்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நாடே பெருமைகொள்ளும் வகையில் அமைந்ததாக தெரிவித்தார். பல்வேறு துறைகளில் நாட்டை பாதுகாக்கும் பெண்களின் வலிமையை பறைசாற்றும் வகையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.