குலைநடுங்கவிடும் நிபா வைரஸ்.. 2 பேரை கைதுசெய்த போலீஸ்
கேரள மாநிலம் மலப்புரத்தில், நிஃபா வைரஸ் தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மலப்புரத்தில் 14 வயது சிறுவன், நிஃபா வைரஸால் உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் யாருக்கும் நிஃபா வைரஸ் தொற்று இல்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மேலும் தெரிவித்த வீணா ஜார்ஜ், அனகாயம், பாண்டிக்காடு ஆகிய பகுதிகளில் பல்வேறு மருத்துவக்குழுக்கள் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் உடன், தொடர்பு பட்டியலில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும், நிஃபா வைரஸ் குறித்து, சமூக வலைதளங்களில் தவறான புரிதல்களை பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஒரு குழு, மலப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளது. அந்தக்குழு, பல்வேறு இடங்களில் உள்ள வவ்வால்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது.