நீட் ஆள் மாறாட்ட வழக்கு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை கிடப்பில் போட்டது ஏன்? என தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு நீட் தேர்வின்போது, ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கியது தெரியவந்தது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தருண்மோகன், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு மனுதாக்கல் செய்தார். இந்த மனு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருண்மோகனின் மனுவை நிராகரிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "குற்றச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை... இதுகுறித்து தேசிய தேர்வு முகமை, பதில் அளிக்க வேண்டும்..." என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கானது, வரும் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.