தூக்கத்திலேயே பிரிந்த இந்தியர்களின் மூச்சு.. குவைத் விபத்தின் சொல்ல முடியா பெரும் சோகம்

x

தூக்கத்திலேயே பிரிந்த இந்தியர்களின் மூச்சு

குடும்பத்தை பார்க்க ஏங்கி துடித்த இதயம்

குவைத் விபத்தின் சொல்ல முடியா சோகம்

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில், பணிக்கு செல்கின்றனர்.

அந்த வகையில் குவைத்திலும் ஏராளமான இந்தியர்கள் கட்டடத் தொழில் தொடங்கி பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், குவைத் நாட்டில் மங்காஃப் பகுதியில் ஆறு அடுக்குகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கிட்டத்தட்ட 160 தொழிலாளர்கள் தங்கி வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே எண்ணெய் நிறுவனத்தில் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள்.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சமையலறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில், தீ கட்டிடம் முழுவதும் மளமளவென பரவத் தொடங்கியதில், தொழிலாளர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிடத்தில் இருந்து வெளியேற துடித்துள்ளனர்.

இதில் பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தப்பிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்...

ஒரு சிலர் நல்வாய்ப்பாக தப்பிய நிலையில், மேலும் சிலர் தீக்கிரையாகினர்...

அதிலும், காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வேலை முடித்து வந்த தொழிலாளர்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்ததால், தீயில் இருந்து வெளியான புகையை சுவாசித்து மூச்சு முட்டி பலர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது..

இதில் சோகம் என்னவென்றால் உயிரிழந்தவர்களில் பலர் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட குவைத் உள்துறை அமைச்சர் ஃபஹத் யூசுப் அல் சபா, இந்த நிலைக்கு கட்டட உரிமையாளரின் பேராசசையே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்..

காரணம் இந்த குடியிருப்பில் இருந்த தொழிலாளர்கள், குறுகிய இடத்தில் மிகுந்த நெருக்கடியில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தீ விபத்து ஏற்பட்டபோது வெளியேற முடியாமல் துடித்துள்ளனர்..

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அளவில் இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

காரணம், குவைத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரின் நிலை குறித்து அறிய முடியாமல் உறவினர்கள் பலர் தாயகத்தில் வேதனையில் உள்ளனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் வகையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்ன் சிங் குவைத் செல்கிறார்.

மேலும் மாநில அரசு சார்பிலும் தமிழகம் மற்றும் கேரளா அரசுகள்.. உரிய நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற மக்களின் பரிதாப நிலையை கண்டு ஒட்டு மொத்த இந்திய மக்களும் வேதனையில் உள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்