தமிழகத்திற்குள் நுழைந்து 3 சிறுமிகளை தூக்கி சென்ற கேரள நம்பர் கார்கள்..சுற்றி வளைத்து பிடித்த மக்கள்

x

தமிழகத்திற்குள் நுழைந்து 3 சிறுமிகளை தூக்கி சென்ற கேரள நம்பர் கார்கள்.. சுற்றி வளைத்து பிடித்த ஊர் மக்கள்.. பின்னணியில் எதிர்பாரா திருப்பம்

கேரளாவை சேர்ந்தவர்கள், பழங்குடியின கிராமத்துக்குள் புகுந்து சிறுமிகளை வாகனத்தில் ஏற்ற முயன்ற போது ஊர்மக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி, சேமூண்டி பழங்குடியின கிராமத்திற்கு வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட கார் 3 சிறுமிகளை ஏற்றியுள்ளது. இதைக் கண்டு சந்தேகம் அடைந்த கிராம மக்கள், ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற உறுப்பினர், தலைவர் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக வந்தனர். அனைவரும் சேர்ந்து சிறுமிகளை அழைத்துச் செல்ல முயன்றவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். கேரளாவில் இருந்து வந்த 2 வாகனங்களில் ஒன்று வேகமாக சென்றுவிட்ட நிலையில் மற்றொரு வாகனத்தைப் பிடித்து அதில் இருந்த தம்பதியையும், சிறுமிகளையும் நேராக காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிகளின் தாய்- தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களை கேரளா அழைத்து செல்வதற்காக வாகனத்தில் ஏற்றியது தெரிய வந்தது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அவர்கள் வீட்டு வேலைக்காக சிறுமிகளை அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தீவிர விசாரணை நடத்த காவல்துறையினரிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து போலீசார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்பும் ஏராளமான பழங்குடியின சிறுமிகள் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை மீட்பது குறித்தும் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்