விவசாயியை கொன்ற ஆட்கொல்லி `புலி' - குவிந்த வனக்காவலர்கள் கூடவே வந்த முக்கிய காப்பாளன்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் விவசாயியைக் கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மூடக்கொல்லி பகுதியில் கடந்த சனிக்கிழமை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு புல் அறுக்கச் சென்ற பிரஜீஷ் என்ற விவசாயியை புலி ஒன்று அடித்து கொன்று சாப்பிட்டது. இதையடுத்து அந்த பகுதியில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அந்தப் புலியை கண்டு பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் கூண்டுகள் வைத்தும் புலி சிக்காததால், திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைத்து, அவற்றின் மூலம் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் சாபு என்பவரின் வீட்டின் பின்புறமும், விவசாய நிலத்திலும் புலியின் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளதால், அது ஆட்கொல்லி புலியின் கால் தடமா என ஆய்வு செய்து வருகின்றனர். ஆட்கொல்லி புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கவும், புலியை சுட்டு பிடிக்கவும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். புலியை பிடித்து விடும் முனைப்பில் சுமார் 100 வனக்காவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.