கணவனுக்கு அறுவை சிகிச்சை.. கட்டை பிரித்த மனைவிக்கு அதிர்ச்சி.. கேரளாவில் பரபரப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அறுவை சிகிச்சையின் போது காயமடைந்த நபரின் முதுகில் கையுறையையும் சேர்த்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷினு. இவரது முதுகில் சில நாட்களுக்கு முன்பு திடீரென வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது வீக்கத்தை பார்த்த மருத்துவர், ஐந்து நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து கொடுத்து அனுப்பிய நிலையில், வீக்கம் குறையாததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்பும் ஷினுவின் முதுகில் வலி தீரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதுகு பகுதியில் போடப்பட்டிருந்த கட்டை அகற்றி பார்த்த போது அதில் கையுறையும் சேர்த்து தையல் போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவ்விவகாரம் தொடர்பாக இருவரும் மருத்துவமனை சென்று உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், இது மருத்துவர்களின் தவறல்ல எனவும் கிளவு டிரெயின் சிஸ்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இவ்விவகாரத்தின் உண்மைத்தன்மை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.