வருவார் என எதிர்பார்த்த ED-க்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த கெஜ்ரிவால்..
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில
முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிஸோடியாவை
சி.பி.ஐ கடந்த பிப்ரவரியில் கைது செய்தது.
அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ள நிலையில்,
டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலிற்கு, அமலாக்கத்
துறை அக்டோபர் 30 அன்று சம்மன் அனுப்பியிருந்தது.
வியாழன் அன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள
அமலாக்கத்துறை தலைமையகத்தில், இந்த வழக்கு
தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று
சம்மனில் கூறப்பட்டிருந்தது.
இது அரசியல் உள்நோக்கங்களின் அடிப்படையில்
அனுப்பப்பட்ட, ஆதாரமற்ற, தெளிவற்ற சம்மன் என்று
இதற்கு மறுப்பு தெரிவித்த கெஜ்ரிவால், அமலாகக்த் துறை
விசாரணைக்கு செல்ல மறுத்து விட்டார். இதைப் பற்றி
விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் 30 மாலை தான் தனக்கு சம்மன் அனுப்பபட்டதாகவும், ஆனால் அன்று மதியம், பாஜக எம்.பி மனோஜ் திவாரி, இதைப்பற்றி விமர்சனம் செய்யத் தொடங்கியதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை முன்கூட்டியே, இந்த சம்மன் பற்றிய
விவரங்களை பாஜக தலைவர்களுக்கு அளித்துள்ளது
இதன் மூலம் உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தான் சாட்சியா?
அல்லது குற்றம் சாட்டப்பட்டவரா? என்று இந்த சம்மன்
தெளிவாக குறிப்பிடவில்லை என்றும், ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஈடுபட்டுள்ளாதால்
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை
என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 4ல் ஆம் ஆத்மி கட்சி
எம்.பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.
நவம்பர் 2ல் டெல்லி மாநில சமூக நலத் துறை அமைச்சர்
ராஜ்குமார் ஆனந்தின் வீடு உள்ளிட்ட ஒன்பது இடங்களில்
சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.