ரூ.210 கோடி அபராதம்... ஹைகோர்ட் படியேறிய காங்.,..! பரபரப்பில் டெல்லி அரசியல்
வங்கி கணக்குகள் முடக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி, கடந்த 2018-ம் ஆண்டில் வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த கணக்குகளை மீட்க 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. வங்கிக் கணக்குகள் முடக்கத்திற்கு எதிராக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வங்கி கணக்குகளை நிபந்தனையுடன் தற்காலிகமாக இயக்கிக் கொள்ள கடந்த 16-ஆம் தேதி அனுமதி அளித்தது. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போட்டியிட்டு அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வருமானவரித் துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், காங்கிரஸ் கட்சியின் மனுவை வருமான வரி தீர்ப்பாயம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முறையீட்டை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம், இன்றே விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.