தங்கத்தின் தலைகீழ் மாற்றம்.. தீபாவளிக்கு முந்தினால் தப்பிக்கலாம் - வார்னிங் கொடுக்கும் வியாபாரிகள்
வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன ? இனியும் விலை அதிகரிக்குமா ? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது தங்கத்தின் விலை....
தங்கத்தை விரும்பி வாங்கும் பலருக்கும், தங்கத்தை சேமிப்பாக பார்க்கும் ஏழை எளிய மக்களுக்கு தினம் தினம் ஷாக் கொடுத்து தான் வருகிறது தங்கம்..
ஜனவரி மாதம் 46 ஆயிரத்து 800 ஆக இருந்த தங்கம் விலை, பிப்ரவரியில் 47 ஆயிரத்தை தொட்டதோடு, படிப்படியாக உயர்ந்து மார்ச் மாதம் 51 ஆயிரத்திற்கு விற்பனையானது..
ஏப்ரல் மாதத்தில் 53 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டதோடு, மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் 54 ஆயிரத்திற்கு விற்பனையானது..
ஆகஸ்ட் மாதத்தில் சற்றே குறைந்து 53 ஆயிரத்திற்கு வந்த தங்கம் விலை, செப்டம்பரில் 56 ஆயிரத்திற்கு விற்பனையாகி விழி பிதுங்க செய்தது..
அக்டோபர் மாதம் விஸ்வரூபம் எடுத்து வந்த தங்கம் விலை, படிப்படியாக உச்சத்தை நோக்கி நகர்ந்தது.
கடந்த 16ம் தேதி, 57 ஆயிரத்து 120 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, 18ம் தேதி 57 ஆயிரத்து 920 ரூபாயாக உயர்ந்தது..
19ம் தேதி புதிய உச்சமாக 58 ஆயிரத்து 240 ஆக உயர்ந்த நிலையில், 21ம் தேதி 58 ஆயிரத்து 416ஆக உயர்ந்திருக்கிறது....
இனியும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என வயிற்றில் புளியை கரைக்கின்றனர் வியாபாரிகள். இதற்கு சர்வதேச சந்தையில் தங்கம் முக்கிய பங்காற்றுவதே காரணம் என்றும் கூறப்படுகிறது..
இன்னும் அடுத்தடுத்து பண்டிகைகளும் அணிவகுத்து வரும் சூழலில், விலையும் விண்ணை முட்டி வருவதால் மக்கள் கலக்கம் கொண்டாலும், விற்பனை அதிகரிக்கவே செய்யும் என்கின்றனர் வியாபாரிகள்...
விற்பனையாளர்களின் கணிப்புக்கு ஏற்றப்படி தங்கத்தை வாங்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்தபாடும் இல்லை...
விலை உயர்ந்தாலும் வசதி படைத்தவர்களின் விருப்பத் தேர்வாகவும் நீடித்து நிற்கிறது தங்க ஆபரணங்கள்...
மற்றொரு புறம் விலை உயர்வால் தங்கம் வாங்க முடியாத சூழல் இருந்தாலும், சேமிப்பு என்பதால் சிறுக சிறுக சேமிக்கவும் ஆயத்தமாகவே உள்ளனர் ஏழை எளிய மக்கள்...