ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் - ஐந்து வாக்குறுதிகள்? - காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் முதல் ஆலோசனைக் கூட்டம், ஹைதராபாதில் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, ஹைதராபாதில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, 5 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட உள்ளன. மூன்றாவது நாளான திங்கள்கிழமை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், மாநிலத்தில் உள்ள115 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் பிரச்சாரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.