விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..! | Farmers Protest
விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, சண்டிகரில் மத்திய அரசு நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராய், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், 14 விவசாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 4 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல், இந்திய பருத்திக் கழகம் விவசாயிகளுடன் 5 ஆண்டு ஒப்பந்தம் செய்து, குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிர்களை வாங்கும் என்றார். மேலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து பொருட்களை வாங்கும் என்றும், கொள்முதல் அளவுக்கு வரம்பு இல்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தினர், மற்ற விவசாயிகள் மற்றும் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி இன்று முடிவை அறிவிப்பதாக கூறினர். மேலும், டெல்லி நோக்கிய பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், 2 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்