மொத்த நாட்டையும் உலுக்கிய ஒரு மரணம் ஹரியானா CM நாற்காலிக்கு வைக்கும் வேட்டு? ரூ.1 கோடி...அரசு வேலை அறிவித்த பஞ்சாப் விழிபிதுங்கும் மத்திய அரசு - ரணமாகும் தலைநகர் எல்லை...
டெல்லியை நோக்கிய பேரணியை தீவிரப்படுத்தி வந்த விவசாயிகள், வரும் 19ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்தத் தொகுப்பு...
கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு, தடியடி என தலைநகரமே ரணகள பூமியாக மாறியுள்ளது. இளம் விவசாயி மரணம், அந்த களநிலவரத்தை இன்னும் மோசமாக்கிய நிலையில்தான், மேலும் இரண்டு நாட்களுக்கு தங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர் விவசாயிகள் ...
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி சென்ற விவசாயிகள் மீது, எல்லையில் வைத்து கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு என தாக்குதல்கள் தொடர்ந்தன.
இதற்கிடையே 18ம் தேதி அன்று, மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தி, உள்ளிட்டவற்றிற்கு குறைந்த ஆதார விலை நிர்ணயித்து, மத்திய அரசு கொள்முதல் செய்யும் என கூறினர்.
விவசாயிகள் இதை ஏற்கவில்லை. நிரந்தர தீர்வுதான் அவசியம், தற்காலிக தீர்வு அவசியமல்ல என்ற நோக்கத்தில் பஞ்சாப், ஹரியானா எல்லையான கானா எல்லையில் தடுப்புகளை அகற்ற முயன்றனர்.
அப்போது விவசாயிகளை தடுத்து நிறுத்த தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயதான இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார். இந்த நிகழ்வு விவசாயிகள் நெஞ்சை மேலும் ரணப்படுத்தியது.
இந்த நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இதனால் 26ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். அன்றைய தேதியில் பேரணி நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்
இந்த நிலையில் இறந்த இளம் விவசாயிக்கு சுப்கரன் சிங்கின் குடும்பத்துக்கு பஞ்சாப் முதலமைச்சர் 1 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். அதே போல, உயிரிழந்த அந்த விவசாயியின் தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது
இதற்கிடையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் கருப்பு தினம் அனுசரித்தனர். மேலும் அங்கு ஹரியானா முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலித்தது. போராட்டத்தில் விவசாயிகள் மீது நடந்த அத்துமீறல்கள், உள்ளிட்ட பல பகீர் செய்திகளும் வந்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில்தான் பிப்ரவரி 29ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு நாடு முழுவதும் இரங்கல் கூட்டம் நடத்த உள்ளனர். அதே நேரத்தில், பிப்ரவரி 26ம் தேதி அரசை கண்டித்து உருவ பொம்மைகளை எரிக்கப் போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால், அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம், பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசு அவர்களது கோரிக்கைக்கு இறங்கி வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.