ED-ல் சிக்கிய அங்கித் திவாரி வழக்கு.. தமிழக அரசுக்கு அவகாசம்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, அமலாக்கத் துறை தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அங்கித் திவாரி, 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவருக்கு வருகிற 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு சார்பில் மேலும் இரண்டு வாரம் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கு மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.