டெல்லியில் உருளும் தலைகள்... கெஜ்ரிவால் மனைவி Vs அமைச்சர் அதிஷி- தலைநகரின் அரியணை யாருக்கு..?
முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்ததை அடுத்து, டெல்லி முதலைமைச்சர் யார்? என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 5 மாத சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்...
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும், அரசியல் செயல்பாடுகளையும் நாடே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென இன்னும் 2 நாள்களில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தது யாரும் எதிர்பாரா ஒன்று....
இதனால், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் டெல்லி அரசியல் களத்தை சூடாக்கி இருக்கிறது..
இந்த வரிசையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் அதிஷி மற்றும் சுனிதா கெஜ்ரிவால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டிருக்கின்றன..
இதில், மணிஷ் சிசோடியாவும், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்றிருப்பதால், தன்னையும், மணிஷ் சிசோடியாவையும் மக்கள் நேர்மையானவர்கள் என்று சொன்ன பிறகே பதவியில் அமர்வோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது..
இதன் மூலம், மணிஷ் சிசோடியா முதல்வராக பதவியேற்க போவதில்லை என்பது தெளிவாகிறது..
வரிசையில் அடுத்தபடியாக இருப்பது அமைச்சர் அதிஷி...
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது டெல்லியை நிர்வகித்தது அதிஷிதான்...
கல்வி, நிதி, திட்டம், மக்கள் தொடர்பு, பொதுப்பணித்துறை என கிட்டதட்ட 14 துறைகளை தன் கையில் வைத்துக்கொண்டு டெல்லி அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக வலம் வருகிறார் இவர்...
கல்விக்கான டெல்லி சட்டமன்ற குழுவின் தலைவரான இவர், மக்களை கவரக்கூடிய வகையில் பேசும் திறன் கொண்ட வலுவான பேச்சாளரும் கூட..
மேலும், கடந்த ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தின்போது, சிறையில் இருந்த கெஜ்ரிவால், சுதந்திர தினத்தில் அதிஷியை கொடியேற்ற அனுமதிக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில், கிட்டதட்ட டெல்லியின் அடுத்த முதல்வர் அதிஷிதான் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது...
இதனிடையே, இவருக்கு போட்டியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை முன்வைத்து சிலர் காய் நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது...
சுனிதா கெஜ்ரிவால் முன்னாள் வருவாய்த்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது...
டெல்லி, ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மிக்காக லோக்சபா தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டதன் மூலம் அறியப்பட்ட இவர், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது நாள் தோறும் ஊடகங்களை சந்தித்து வந்தார்...
இப்படி, பரபரத்து போயிருக்கும் டெல்லி அரசியல் களத்தில், அடுத்த முதல்வர் பதவிக்கு இரு பெண்களுக்கிடையே போட்டோ போட்டி ஏற்பட்டிருப்பதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..
இருந்தபோதிலும், டெல்லியின் அடுத்த புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு ஒரு வாரத்தில் விடை தெரிந்து விடும்...