ஏமாற்றிய சர்ச்சை மன்னன் ஸ்ரீசாந்த்.. பாய்ந்த அதிரடி வழக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சரிஷ் கோபாலன் புகாரின் பேரில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள கொல்லூரில் சரிஷ் கோபாலனை சந்தித்த ஸ்ரீசாந்த், ராஜீவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகிய மூவரும் சேர்ந்து ஐந்து சென்ட் நிலத்தில் வில்லா கட்டி தருவதாக கூறி ரூபாய் 19 லட்சம் பணத்தை பெற்றுள்ளனர். ஆனால் உறுதி அளித்தபடி வில்லா கட்டி கொடுக்காததால் சரிஷ் கோபாலன் கண்ணூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கண்ணூர் டவுன் போலீசார் ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஸ்ரீசாந்த், ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே தண்டனை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.