நண்பனின் மாமியாருடன் கள்ளக்காதல்... தட்டிகேட்ட மருமகன் குத்திக்கொலை...
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையம்.
தலையில் பலத்த கட்டுடன் போலீஸ் வாகனத்தில் ஏறி செல்லும் இந்த 10 நம்பர் புளூ டி-சர்ட் தான் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட உயிர் நண்பனை கத்தியால் குத்திக்கொன்ற படுபாதகன்.
என்ன நடந்தது...? கள்ளக்காதல் கொலையில் முடிந்தது எப்படி..?
கொல்லப்பட்டவர் ஆரோவில் அருகில் உள்ள குருசுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன்.24 வயதான இவர் செல்லப்பிராணிகளான நாய்களை வளர்த்து விற்பனை செய்யும் வேலையை செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
முகுந்தனின் மனைவி ரம்யாவுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. அவரை வளர்த்தது எல்லாம் சித்தி கோமதி தான். இதனால் திருமணம் முடிந்த பிறகு ரம்யாவும் முகுந்தனும் கோமதிக்கு துணையாக அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்த தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று மனைவி ரம்யாவுடன் ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு சந்தோஷமாக வீடு திரும்பிய முகுந்தன், இப்படி பரிதாபமாக குத்தி கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்த பயங்கரத்தை செய்தது வேறு யாருமல்ல....முகுந்தனின் ஆருயிர் நண்பன் தேவா.....காரணம் கள்ளக்காதல்....
ஆம்....முகுந்தனுக்கும் தேவாவும் பாலிய ஸ்நேகிதர்கள். ரம்யாவை முகுந்தனுக்கு திருமணம் செய்து வைத்ததே தேவா தான். அந்த பழக்கத்தில் தேவா அடிக்கடி நண்பனின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
அப்படி வரும் போது தான் முகுந்தனின் மாமியார் கோமதிக்கும், நண்பன் தேவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இந்த விஷயம் முகுந்தன், ரம்யாவிற்கு தெரியவர கோமதியையும் தேவாவையும் கண்டித்திருக்கிறார்கள்.
ஆனால் ருசி கண்ட பூனை போல கள்ளக்காதலர்கள் இருவரும் அதை எல்லாம் காதில் வாங்காமல் தங்களது ரகசிய காதலை தொடந்துள்ளனர்.
இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று மாலை முகுந்தனும் மனைவி ரம்யாவும் ஜெய்லர் படத்திற்கு சென்றிருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக்கொண்ட கோமதி, தேவாவை வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.
உடனே தேவாவும் வீட்டிற்கு வர, நேரம் போனதே தெரியாமல் இருவரும் தனிமையில் சல்லாபித்திருக்கிறார்கள்.அப்போது படம் முடிந்து வீட்டிற்கு வந்த முகுந்தனும், ரம்யாவும் இவர்களின் காதல் லீலையை கண்டு கொதித்து போயிருக்கிறார்கள்.
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முகுந்தன் தரையில் கிடந்த கட்டையை எடுத்து தேவாவை அடித்து தாக்கி இருக்கிறார். தாக்குதலில் கடுப்பான தேவா, அங்கிருந்த கத்தியால் முகுந்தனை குத்தி கிழித்திருக்கிறார்.
ரம்யாவும் கோமதியும் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் சரமாரியாக குத்தியதில் முகுந்தன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துபோயிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளி தேவாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.