"சந்திராயன், ககன்யான் விஞ்ஞானிகளில் நான்கில் ஒருவர் பெண்" - "பெண்களின் வளர்ச்சி உலக வளர்ச்சி"
குஜராத்தில் நடைபெற்று வரும் மகளிர் அதிகாரம் குறித்த ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே இந்தியாவின் தலையாய முன்னுரிமை என குறிப்பிட்டார். முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்ட பயனாளிகளில் 70 சதவீதம் பேர் பெண்கள் எனவும், இந்தியாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகளில் 4ல் ஒருவர் பெண் எனவும் குறிப்பிட்டார். மேலும், சந்திராயன், ககன்யான் போன்ற வெற்றிகரமான திட்டங்களில் பெண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பும் திறமையும் அடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள 80 சதவீத செவிலியர்கள் பெண்களே எனவும், எளிமையான பழங்குடியின பின்னணியில் இருந்து வந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழிநடத்தும் பொறுப்பிற்கு உயர்ந்து, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்த அவர், உலகின் 2வது மிகப்பெரும் ராணுவத்தையும், தலைமை தளபதியாக திரவுபதி முர்மு வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் பெண்களை தலைமையாகக் கொண்ட "யூனிகான்" நிறுவனங்களின் ஒட்டு மொத்த மதிப்பு 40 பில்லியன் டாலர் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெண் சாதனையாளர்களுக்கு சமமான தளத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டார். பெண்கள் வளர்ச்சி அடைந்தால் உலகம் வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிட்ட அவர், பெண்களுக்கு கிடைக்கும் கல்வி உலகத்தின் வளர்ச்சியை இயக்குவதாகத் தெரிவித்தார்.