நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த ஆக. 23..!"தேசிய விண்வெளி தினம்.." மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாட, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில், இந்திய விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சந்திரயான் - 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில், பெண் விஞ்ஞானிகள் பெருமளவில் பங்காற்றியது பெருமை அளிப்பதாகவும், இது அடுத்த தலைமுறை பெண் விஞ்ஞானிகளுக்கு உந்து சக்தியாக திகழும் எனவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய விண்வெளி திட்டத்தில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் தலைமைக்கு, மத்திய அமைச்சரவை நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.