"ஜெயிலர்" படம் பார்த்துவிட்டு வந்தவர் பட பாணியிலே கொடூரமாக கொலை -
புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன். அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், குழந்தை இல்லை.
தம்பதி இருவரும், ஆரோவில் அருகே உள்ள குமரன் நகர் சேரன் வீதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
செல்லப் பிராணியான நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருவதே முகுந்தனின் தொழிலாக இருந்து வந்துள்ளது.
முகுந்தனின் வீட்டு எதிரிலேயே மாமியார் கோமதியும் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மாமியார் கோமதியின் வீட்டிற்கு, தேவா என்ற இளைஞர் வந்து போவதை முகுந்தன் கண்காணித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்தபோது, மாமியார் கோமதியும், தேவாவும் தகாத உறவில் இருப்பது தெரியவர, முகுந்தனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமியார் வீட்டுக்கு தேவா வந்து செல்வதை முகுந்தன் தட்டிக் கேட்டு தகராறு செய்த நிலையில், தேவாவுக்கு முகுந்தன் மீது முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில். மனைவியுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார் முகுந்தன்.
தியேட்டரில் இருந்து முகுந்தன் வீடு திரும்பியபோது, அவரது மாமியார் வீட்டில் இருந்து தேவா வெளியே வருவதைக் கண்டு கோபமடைந்துள்ளார்
எச்சரித்த பிறகும் மீண்டும் மாமியார் வீட்டிற்கு தேவா வரவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கிருந்து வேகமாக சென்ற தேவா, விடியற்காலை 3 மணி அளவில் மீண்டும் முகுந்தனின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த முகுந்தனை, கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
கணவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த மனைவி ரம்யா, கணவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முகுந்தனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ரம்யா மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்க, முகுந்தனின் மனைவி ரம்யா வேதனையில் மூழ்கியுள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், முகுந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவாக இருந்த தேவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாயின் தகாத உறவால், சொந்த மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், மாமியாரை கண்டித்த மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.