"அப்துல் கலாம் பிறந்தநாள் - அரசு விழா" - பேரவையில் வெளியான அறிவிப்பு
அப்துல் கலாம் பிறந்தநாள் - அரசு விழா" - பேரவையில் வெளியான அறிவிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செய்தித்துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டார். அப்போது, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ம் நாள் சென்னையில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனாரின் பிறந்தநாளான ஏப்ரல் 25ம் நாள், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளான ஜூலை 7ம் நாள், சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாளான அக்டோபர் 9ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அவர் தெரிவித்தார். காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்த அல்லாள இளைய நாயக்கரின் பிறந்தநாள், சுதந்திர போராட்ட தியாகி அண்ணல் தாங்கோ பிறந்தநாள், முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் சுப்பராயனின் பிறந்தநாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாள்..... ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள், நீதிக்கட்சியின் வைரத்தூண் என போற்றப்படும் பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பிறந்தநாள் உள்ளிட்டவை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.