இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைனில் இருந்து இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
x
இந்தியர்கள் மீட்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனில் பல்வேறு இடங்களில் பரவிக்கிடந்த மருத்துவ மாணவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறினார்.  பிரதமரும் இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டதாகவும், 
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் பதற்றம் தொடங்கியபோதே இந்திய மாணவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான வசதியை இந்திய தூதரகம் ஏற்படுத்தியது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். உக்ரைன் வான் வெளி மூடப்பட்டுதன் காரணமாக இந்திய மாணவர்கள் ருமேனியா ஸ்லோவேகியா உள்ளிட்ட எல்லைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டது அவசியமானதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். 
 அனைவருடைய முயற்சியின் காரணமாக ஆபரேஷன் கங்கா திட்டம் வெற்றியடைந்தது என்றும், 
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 90 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். பிரதமரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா அதிபருடன் பேசி இந்திய மாணவர்கள் பத்திரமாக திரும்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார். 
 தங்கள் நாட்டு எல்லைகளை திறந்து இந்திய மாணவர்களுக்கு உதவி செய்த கூட்டாளி நாடுகளுக்கும் நன்றி என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.  கார்கீவ் மற்றும் சுமி போன்ற பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடைபெற்று வந்ததாகவும், எனவே அங்கிருந்து இந்திய மாணவர்களை மீட்பதற்கு அனைத்து விதமான சாத்தியமுள்ள வழிகளும் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார். பிற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியின் தனிப்பட்ட முறையிலான தலையீட்டின் காரணமாக சுமி பகுதியில் இருந்து மாணவர்களை மீட்பது சாத்தியமானது என்றும் மத்திய அமைச்சர் ​ஜெய்சங்கர் தெரிவித்தார். உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளுக்கு 90 டன் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த நவீன் சேகரப்பாவின் மரணத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், வன்முறையை கைவிட்டு விட்டு ரஷ்யா உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்