"ஓ.டி.டி தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
ஓ.டி.டி தளம் மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோகன் பகவத், சுதந்திரத்தின்போது நடந்த பிரிவினை சோகமான வரலாறு என்றும், பிரிவினை கலாச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தேச ஒருமைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். தற்போது குழந்தைகளும் செல்போன்கள் பயன்படுத்தும் நிலையில் ஓ.டி.டி.(OTT) தளங்களுக்கு தணிக்கை அவசியம் என மோகன் பகவத் வலியுறுத்தினார். புதிய மக்கள் தொகை கொள்கையை அடுத்த 50 ஆண்டுகளை கணக்கில் வைத்து உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தியா தனது எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story