லக்கிம்பூர் வழக்கு- ஆஷிஸ் மிஸ்ரா 11 மணி நேர விசாரணைக்குப்பின் கைது
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா 11 மணி நேர விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசாரின் அடுத்தடுத்த சம்மன் மற்றும் உச்சநீதிமன்ற அழுத்தத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஸ் மிஸ்ரா உத்தரபிரதேச குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற விசாரணை இரவு வரை நீடித்தது. 8 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பிய போலீசார் அவரின் பதில்களை பதிவு செய்தனர். ஆனால் அவர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிருப்தி தெரிவித்த போலீசார், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதாக கூறி ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்தனர். இதனையடுத்து ஆஷிஸ் மிஸ்ராவை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை தற்காலிகமாக நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆஷிஸ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரியுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Next Story