3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் - சென்னையில் தம்பதி கைது

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடுக்கிட செய்யும் இச்சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் - சென்னையில் தம்பதி கைது
x
ஈரானில் இருந்து குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்களில், 3,000 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் கடத்திவந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு 15 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சோப்பு கற்கள் உள்ளதாக சொல்லப்பட்ட அந்த கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,  சோப்பு கற்களுக்குள் 3,000 கிலோ ஹெராயின் பதுக்கப்பட்டிருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

கடந்த சில ஆண்டுகளில் இவ்வளவு அதிக எடை கொண்ட போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்பதால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கிய நிலையில், இதுதொடர்பாக விஜயவாடாவை சேர்ந்த பெண்ணும், அவரது கணவரும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அபின், ஹெராயின் தயாரிப்புக்கு தேவையான பாப்பி செடிகளின் அதிகளவில் பயரிடப்படுகின்றன. முந்தைய தலிபான் ஆட்சியில், பாப்பி செடி சாகுபடி தடை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், மறைமுகமாக அங்கு உற்பத்தி நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

உலகளவில் கடத்தப்படும் அபின், ஹெராயின் போதை மருந்தில், பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குஜராத்தில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, இதன் பின்னணியில் பெரிய புள்ளிகள் இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்