இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு - வரதட்சணை கேட்டு கொடுமை என புகார்

கேரளாவில் கணவன் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வாட்ஸ்-அப்பில் உறவினர்களிடம் தெரிவித்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு - வரதட்சணை கேட்டு கொடுமை என புகார்
x
கேரளாவில் கணவன் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வாட்ஸ்-அப்பில் உறவினர்களிடம் தெரிவித்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம் நிலமேல் கைதோடு பகுதியை சேர்ந்தவர் விக்ரமன் நாயர். இவருடைய 24 வயது மகள் விஸ்மயா ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார்.

விஸ்மயாவுக்கும் சாஸ்தாம் கோட்டையை சேர்ந்த மோட்டார் வாகனப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கிரணுக்கும் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலே கிரண் கூடுதல் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசியதால் கடந்த ஜனவரியில் விஸ்மயா தன்னுடைய தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற கிரண் விஸ்மயாவையும், அவருடைய சகோதரரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஸ்மயா தந்தையின் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் விஸ்மயாவை தன்னுடைய வீட்டுக்கு கிரண் அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு சென்றதும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், வரதட்சணை கேட்டு கிரண் கொடுமை செய்வதாகவும் விஸ்மயா உறவினர்களிடம் வாட்ஸ் அப் மூலம் தெரிவித்து உள்ளார். மேலும் தனக்கு நேரிட்ட காயங்களையும் புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளார். இதனை பார்த்து உறவினர்கள் அதிர்ந்த நிலையில், விஸ்மயா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் எனவும் மருத்துவமனைக்கு வருமாறும் அவருடைய பெற்றோருக்கு கிரணின் பெற்றோர் தகவல் தெரிவித்து உள்ளனர். 

இதனையடுத்து கதறி துடித்த விஸ்மயாவின் பெற்றோர், இது தற்கொலையல்ல, தங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

திருமணத்தின் போது 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம் மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் கார் வேண்டாம் 10 லட்சம் ரூபாயை தரவேண்டும் என கிரண் வலியுறுத்தியதாக விஸ்மயா தந்தை கூறியிருக்கிறார். இதற்கிடையே தலைமறைவான கிரணை கைது செய்து அம்மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்