நாசாவின் வெற்றி - யார் இந்த சுவாதி மோகன்?
நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு மத்தியில் பிரத்யேகமாக கொண்டாடப்படும் சுவாதி மோகன் யார்? என்பதை தற்போது பார்க்கலாம்...
நாசாவின் வெற்றி - யார் இந்த சுவாதி மோகன்?
நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு மத்தியில் பிரத்யேகமாக கொண்டாடப்படும் சுவாதி மோகன் யார்? என்பதை தற்போது பார்க்கலாம்...
உலகம் திரும்பி பார்க்கும் விஞ்ஞானியாகி இருக்கும் சுவாதி மோகன், இந்தியாவில் இருந்து தன்னுடைய ஒரு வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்.வடக்கு வர்ஜீனியாவில் வளர்ந்த அவர், தன்னுடைய 9 வயதில் 'ஸ்டார் ட்ரெக்' படத்தை பார்த்ததும் பிரபஞ்சத்தில் புதிய மற்றும் அழகான இடங்களை கண்டுபிடிக்க ஒரு விஞ்ஞானியாக விரும்பியவர்.ஆனால் 16 வயதில் சுவாதி மோகன் படிப்பு மருத்துவத்தை நோக்கி பயணித்தது. பள்ளிப் படிப்பின்போது, இயற்பியல் ஆசிரியரின் சிறப்பான கற்பித்தலால் மீண்டும் விண்வெளி பயணக் கனவுக்கு ஒளிவீச தொடங்கியது.அந்த வழியில் பயணிக்க கார்னெல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார், சுவாதி மோகன். பின்னர் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பிரிவில் எம்.எஸ். ஆராய்ச்சி படிப்பை முடித்தார்.நாசாவில் பணியாற்ற தொடங்கிய சுவாதி மோகன், சனி கிரக ஆராய்ச்சிக்கான காசினி விண்கல திட்டம், நிலவுக்கான கிரெயில் இரட்டை செயற்கைக்கோள் திட்டத்தில் முக்கிய பணிகளை செய்தார்.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? என்பதை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பும் திட்டத்தில் 2013-ஆம் ஆண்டில் சுவாதி மோகன் இணைக்கப்பட்டார்.இந்தத் திட்டத்தில் சுவாதி மோகனுக்கு விண்கலம் பயணிக்கும் பாதைக்கான வழிகாட்டல், கிரகத்திற்குள் நுழைதல் மற்றும் விண்கலகத்தை தரையிறங்குவதற்கான கட்டுப்பாட்டு கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பிற குழுவுடன் தகவல் பரிமாற்ற பணி வழங்கப்பட்டது.7 ஆண்டுகள் தொடர் பணிகள் முடிந்ததும் கடந்த ஜூலை 30 ஆம் தேதி நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம், 7 மாத பயணத்திற்கு பின், கடந்த புதன்கிழமை தரையிறங்க சரியான திசையில் நிறுத்தப்பட்டது.அப்போது தரையிறங்குவதற்கு மிக முக்கியமான 7 நிமிடங்களை வெற்றிகரமாக பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்து சாதனை படைத்தது.ரோவரின் உயரத்தை கையாண்டு கட்டுப்பாட்டுடன் தரையிறக்கிய சுவாதி மோகன், நாசா மையத்தில் " ரோவர் பாதுகாப்பாக தரையிறங்கியது, ஆய்வுகளை செய்ய தொடங்கும்...." என அறிவித்ததும் பிற விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். பலரும் சுவாதி மோகனை கொண்டாடினர்.சுவாதி மோகன் நிகழ்த்திய உரை நாசா டுவிட்டர் தளத்தில் வெளியானதும் இந்தியர்கள் அனைவரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்தனர். பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
Next Story