சென்னையில் என்.ஐ.ஏ. கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் என்.ஐ.ஏ. கிளை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
x
டெல்லி, மும்பை, ஐதராபாத், கொச்சி என ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பின் 9 கிளைகள், நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிதாக சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய நகரங்களில் என்ஐஏவின் கிளைகள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்குகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், முக்கியமான தகவல் மற்றும் சான்றுகளை விரைந்து பெற இது உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியாவின் மருந்து உற்பத்தி திறன்  உலகிற்கே பயனுள்ளதாக இருந்தது" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கொரோனா  பாதிப்பின் போது இந்தியாவின் மருந்து உற்பத்தி திறன் முழு உலகிற்கும் பயனுள்ளதாக இருந்தது என்று  பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியா-டென்மார்க் இருதரப்பு உச்சி மாநாடு தொடர்பாக அந்நாட்டு பிரதமர் மேட்டி பிரெடிரிக்சனுடன் காணொலி மூலமாக பிரதமர் மோடி  ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மோடி, இந்தியாவுக்கு வரும் நிறுவனங்கள் ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு சீர்திருத்தங்களால் பயனடையும் என்றும் தெரிவித்தார்.

"சட்டம் இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள்" - காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியாகாந்தி கடிதம் 

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் மசோதாக்களை செல்லாத தாக்கும் வகையில், சட்டம் இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி,  காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார். அரசியலமைப்பு சட்டம் 254, உட்பிரிவு 2 இன் படி, மாநில அரசுகள் சட்டம் இயற்றுதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய, முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு இழைத்துள்ள அநீதியை போக்க முடியும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதா குறித்த எதிர்க்கட்சி பிரசாரத்தை முறியடிக்க திட்டம் - புதிய வியூகத்தை கையிலெடுக்கும் பாஜக

சமீபத்தில் மழைகால கூட்டத்தொடரில் புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது, இதற்கு எதிர் கட்சியினர்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  அதற்கு  பதிலளிக்கும் விதமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி விவசாய துறை சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க ஒவ்வொரு கிராமத்திலும் பொது பேரணிகளை நடத்த பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். புதிய சட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கு  தீர்வு  வழங்கும் வகையில்  வீதி வீதியாக  தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு  பாஜக தலைமை, கட்சி பிரமுகர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

வேளாண் சட்டம் -  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக,  கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் எம்பி  டி.என்.பிரதாபன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்கள், விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது ஒப்பந்த முறை விவசாயத்தை சட்டபூர்வமாக்குகிறது, இந்திய விவசாயத் துறையை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டு தனியார்மயமாக்க வழி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திராவில் செம்மரம் கடத்திய 5 பேர் கைது

ஆந்திராவில், செம்மரம் கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார், இரண்டு  கார் மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளது. சித்தூர் மாவட்டம்  பாக்ராபேட்டை வனப்பகுதியில், வனத்துறை அதிகாரிகள்  ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தலகொணா  எர்ரவாரி பாளையம் வனப்பகுதியில் இருந்து,ரு வந்த 2 கார்களை மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில்,5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 577 கிலோ செம்மரம் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், தப்பி சென்ற முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

"எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி  மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்திய இசை உலகில் இதற்கு முன்பு லதா மங்கேஷ்கர், புபேன் ஹசாரிகா, எம்.எஸ். சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி ஆகியோருக்கு ஏற்கெனவே பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கியுருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இசை மற்றும் கலை உலகில் எஸ்.பி.பி ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி, பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் எங்கள் சகோதரர் எஸ்.பி.பி.,க்கு நீங்கள் தேடும் மரியாதை, தமிழகம் மட்டுமன்றி, நாடு முழுவதும் எதிரொலிக்கும் என பதிவிட்டுள்ளார். 






Next Story

மேலும் செய்திகள்