நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - செப்.1 முதல் 8 நாட்கள் நடைபெறும் என தகவல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்தினர். இதன்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. உறுப்பினர்களுக்கு அவை அலுவல் தெரியும் வகையில் 4 பெரிய திரைகளும் 6 சிறிய திரைகளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் ஒன்றாம் தேதி துவங்கும் என்றும், 7 முதல் 8 நாட்கள் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தொடரில் 11 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு ஆலோசனை
கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு, நாட்டின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சீரம் மருந்து நிறுவனம் பாரத் பயோடெக், ஜைடஸ் காடிலா, உள்பட பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. உள்நாட்டு உற்பத்தியாளர்களால் உருவாக்கப்படும் பல்வேறு தடுப்பூசிகளின் தற்போதைய நிலை மற்றும் மத்திய அரசிடம் அவர்களின் எதிர்பார்ப்பு பற்றிய விவரங்களை தேசிய நிபுணர் குழுவுக்கு தெரிவித்துள்ளன.
டெல்லி: புதிதாக 787 பேருக்கு கொரோனா பாதிப்பு - இதுவரை 4,214 பேர் உயிரிழப்பு
தலைநகர் டெல்லியில் புதிதாக 787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 367 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் 740 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 214 ஆக உயர்ந்து உள்ளது. 10 ஆயிரத்து 852 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், 5 ஆயிரத்து 552 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
2 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்த கொரோனா - ஒரே நாளில் 6,317 பேருக்கு கொரோனா - 115 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 317 நபர்களுக்கு தொற்று பரவியுள்ளது. 115 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை நான்காயிரத்து 62 ஆக உயர்ந்துள்ளது. ஏழாயிரத்து 71 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பெங்களூரில் நகரில் மட்டும் 2 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா உறுதியானது. மைசூரு மாவட்டத்தில் 597 பேருக்கும், சிவமோகாவில் 397 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத் மரணம் - ரித்தேஷ் தேஷ்முக் உருக்கமான பதிவு
இந்தியில் த்ரிஷ்யம், மாதாரி போன்ற படங்களால் புகழ்பெற்ற நிஷிகாந்த் காமத் ஐதராபாத்தில் உயிரிழந்துள்ளார். நீண்ட கால கல்லீரல் நோய் மற்றும் பிற நோய் தொற்றுகளால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அவரது நண்பரும் இந்தி நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு கலவரத்தில் ஈடுபட்டதாக 354 பேர் கைது - வழக்கை கையாள 3 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
பெங்களூரு கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு நகரில் கடந்த 11ஆம் தேதி கலவரம் நடைபெற்றது. இது தொடர்பாக 354 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளதாக அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்த கலவரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பசவராஜ், இந்த வழக்கை கையாள்வதற்காக 3 அரசு வழக்கறிஞர்கள், பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கேரளா அரசை வஞ்சித்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் - கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் தகவல்
தங்கக் கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் கேரளா அரசை வஞ்சித்து விட்டதாக,அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவசங்கரன் நிச்சயமாக சட்டத்தால் தண்டிக்கப்படுவார் என்றார். தங்க கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்த செயல் அவமானத்திற்குரியது என்றும், அமைச்சர் சுதாகரன் தெரிவித்தார்.
ஐஸ்கீரிமில் விஷம் வைத்து தங்கை கொலை - மகனின் சதியில் சிக்கிய தந்தைக்கு தீவிர சிகிச்சை
காசர்கோடு அருகே வெள்ளரிக்குண்டு பகுதியில் 16 வயதான சிறுமியான ஆன் மேரியை, ஆல்பின் என்ற இளைஞர் கடந்த 5ஆம் தேதி ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், பெற்றோருக்கும் ஐஸ்கிரீமை கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக ஆல்பின் என்பவனை கைது செய்த போலீசார், முகநூல் மூலம் அறிமுகமான ஆல்பினை விரும்பியதாகவும், நடைமுறையில் சரியில்லாததால், விலகிவிட்டதாகவும் காதலி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆல்பின் நண்பர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. முகநூல் நட்பு வட்டாரத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story