சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியீடு
சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின்போது மாநில, மாவட்ட, தாலூகா மற்றும், ஊராட்சி அளவில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, கிருமிநாசினியால் சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்தல், முடிந்தவரை கொண்டாட்ட நிகழ்வுகளுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை பொருத்தவரை முப்படை வீரர்களின் அணிவகுப்பை பிரதமர் ஏற்றுக் கொள்வார் எனவும்,
கொடியேற்றுதல், தேசியகீதம் பாடுதல், பிரதமருடைய சுதந்திர தின உரை போன்றவை இடம்பெறும் என வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களை பொறுத்தவரை முதல்வர்களின் கொடியேற்ற நிகழ்வு, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, சுதந்திர தின உரை போன்றவை இடம் பெறலாம் எனவும், கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கொரோனாவில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பாதிப்பில் இருநது மீண்டவர்கள் சிலரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து நடத்தினால் போதிய தனிநபர் இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
Next Story