கேரள தங்க கடத்தல் விவகாரம் : தானாக போலீசார் வலையில் மாட்டிய சுவப்னா சுரேஷ்
கேரளாவை உலுக்கிய, தங்க கடத்தல் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ் மற்றும், சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவை உலுக்கிய, தங்க கடத்தல் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ் மற்றும், சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில், சுவப்னாவை போலீசார் தேடி வந்த நிலையில், சுவப்னா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளின் செல்போன்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கண்காணித்து வந்துள்ளனர். திடீரென்று நேற்று, சுவப்னாவின், மகள் செல்போனை ஆன் செய்த போது, அதனை கண்காணித்து கொண்டிருந்த, அதிகாரிகள் சிக்னல் மூலமாக அவர்கள் தங்கியிருந்த இடத்தை கண்டு பிடித்தனர். கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சந்தீப் நாயர், சுவப்னா சுரேஷ் அவரது கணவர் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டு பெங்களூருவில் சென்று, அங்குள்ள லே அவுட் எனும் அப்பார்ட்மென்டில் தங்க தயாராயினர். அங்கு மக்கள் அடர்த்தியான பகுதி என்பதால் தங்குவதற்கான இடத்தை மாற்றும் முயற்சியில் ஆக்லேவ் ஸ்டுடியோ என்ற விடுதியில் ஆன்லைன் மூலம், முன் பதிவு செய்து, அங்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களை தீவிரமாக கண்காணித்து வந்த போலீசார், அங்கு சென்ற அரை மணி நேரத்தில், அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். சந்தீப்பின் நண்பர்கள் சிலர், நாகலாந்தில் வசிப்பதால் அவர்கள் உதவியுடன் பெங்களூருவிலிருந்து நாகலாந்துக்கு செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தங்களை என்ஐஏ மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருவதால், எப்படியும் கைது செய்வார்கள் என உணர்ந்து இருவரும் சரணடைய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்காக பெங்களூருவிலிருந்து சுவப்னாவும் சந்தீப்பும் தனித்தனியாக பிரிந்து சுவப்னா மைசூர் பெரிந்தல், மண்ணா வழியாக கேரளாவை அடையவும், சந்தீப் சேலம், பொள்ளாச்சி, அதரப்பள்ளி வழியாக கேரளாவை அடையவும் திட்டமிட்டிருந்தனர். திருவனந்தபுரத்தில் கடந்த ஒரு வாரமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாநகர எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியேறியது எப்படி என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இவர்களிடமிருந்து மொபைல் போன்கள், இரண்டரை இலட்ச ரூபாய் ரொக்கப் பணம், பாஸ்போர்ட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story