லடாக் பகுதியில் சீன ராணுவம் தாக்குதல் - ஒரு கர்னல் மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்து, சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.
x
லடாக் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி நடந்து வந்த சீன ராணுவம், கல்வான் பகுதியில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த மே மாதம் எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலைத்தொடர்ந்து, சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் கல்வான் பகுதியில், சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள், ஒருவருக்கொருவர், கைகள் மற்றும் தடிகளால் தாக்கிக்கொண்டனர். இதில், இந்தியா தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீனத்தரப்பில் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று ஒரே நாளில் 2 முறை இந்திய  ராணுவம் எல்லை மீறி வந்ததாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலில், தங்கள்நாட்டு ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் 

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி வீரமரணம் அடைந்துள்ளார்.  திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் 40 வயதான பழனி, ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.லடாக் எல்லையில் பணியாற்றி வந்த அவர், சீன ராணுவத்தினர் தாக்குதலில் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பழனி வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, கடுக்கலூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்