தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு - உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பெருமிதம்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தியதை போல புல்வாமாவில், ஒரு பயங்கர தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதனை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தியதை போல புல்வாமாவில், ஒரு பயங்கர தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதனை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இதே போன்ற ஒரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிய ராணுவம் தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
40 முதல் 45 கிலோ வெடி மருந்துகளுடன் ஒரு கார் வருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
போலி பதிவு எண் கொண்ட அந்த கார் சோதனை சாவடியை அடைந்த போது, போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆனால், அந்த காரை ஓட்டி வந்த நபர் நிறுத்தாமல் சென்ற நிலையில், போலீசார் துப்பாக்கியால் காரை நோக்கி சுட்டுள்ளனர்.
இதில் அந்த காரை இயக்கி வந்த ஓட்டுநர் தப்பியுள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு காரை பின்னர் பாதுகாப்பு படையினர் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
அந்த காரை ஓட்டிய நபர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என்றும், அவருக்கும், கடந்தாண்டு தற்கொலைப்படை கார் தாக்குதல் நடத்திய அமைப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் அந்த காரை கண்காணித்து வந்ததோடு, அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்திய பின்னரே, வெடி மருந்து இருந்த காரை, தகர்த்ததாக ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காஷ்மீர் போலீஸ், சி.ஆர்.பி.எப். மற்றும் ராணுவத்தினர் இணைந்து உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கையால், மிகப்பெரும் தாக்குதல் சம்பவம் தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையை குறித்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் பெருமிதம் கொள்வதாகவும் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story