"பிரபலமான "Zoom" ஆப் பாதுகாப்பானது அல்ல" - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
வீடியோ கான்பிரன்சிங்கில் பேச பயன்படுத்தப்படும் பிரபலமான Zoom ஆப் பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இணையதளம் மூலம் வீடியோ கான்பிரன்சிங்கில் பேச Zoom ஆப் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் பணிபுரியும் பலரும், சாஃட்வேர் பொறியாளர்களும் Zoom ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைனில் வீடியோ மூலம் பேசவும், கருத்தரங்கு உள்ளிட்டவற்றை பதிவு செய்யவும் Zoom ஆப் பயன்படுத்தபடுகிறது. மேலும்
விரிவான திட்ட அறிக்கைகளை இருதரப்பினரும் ஆன்லைனில் பரிமாறி கொள்ளவும் இந்த ஆப் உதவுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு
Zoom ஆப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 20 கோடிக்கும் மேற்பட்டோர் Zoom ஆப்பை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் Zoom ஆப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து கடந்த 2018 ஆண்டு முதல் நிலவி வருகிறது. முக்கிய நிறுவன அதிகாரிகள் பங்கேற்கும் வீடியோ கான்பிரன்சிங்கின் போது யார் வேண்டுமானாலும் Zoom ஆப் மூலம் அத்துமீறி நுழைய முடியும் என்று
இணையதள வல்லுனர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் போது சிலர் Zoom ஆப் மூலம் ஊடுருவி ஆபாச படங்களை அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் Zoom ஆப்பை அரசு வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் Zoom ஆப்பை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Zoom ஆப்
பாதுகாப்பானது அல்ல என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதை பயன்படுத்த யாராவது விரும்பினால் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவும் என்றும் எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட இந்த ஆப்பை பயன்படுத்துகிறார்கள் எனெபது குறிப்பிடத் தக்கது
Next Story