ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் ராஜினாமா
பொருளாதார புள்ளி விவரங்கள் சேகரிக்கும் முறையை மறு ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் இடம்பெற்று இருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் சி.பி. சந்திரசேகர், அந்த குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தம்மை மிகவும் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேச விரோத சக்திகள் உள்ளது போல ஒரு கதை கட்டமைக்கப்பட்டு வருவது தமக்கு மிகுந்த மனசங்கடத்தை உருவாக்கி உள்ளதாகவும் சி.பி. சந்திரசேகர் ராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பொருளாதார கல்வி மற்றும் திட்டமிடல் துறையின் பேராசிரியர் சி.பி.சந்திரசேகர், கடந்த காலங்களில் புள்ளியியல் சேகரிப்பில் பல முன்னோடிகளுடன் பணியாற்றியதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எல்லாம் நாங்கள் சேகரித்த தரவுகள் நம்பகத்தன்மை கொண்டதாக இருந்தது என்றும், தற்போது, துரதிர்ஷ்வசமாக, பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகளை சேகரிப்பதிலும், புள்ளியியல் துறையின் தன்னாட்சியும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் சி.பி.சந்திரசேகர் சுட்டிக்காட்டி உள்ளார். நேர்த்தியான தகவல் சேகரிக்கும் அமைப்பு தற்போது அதிகாரமற்றதாக மாற்றப்பட்டு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த சூழ்நிலையில் இந்த குழுவில் தொடர்ந்து நீடிப்பது இயலாததாக உள்ளது என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வாடிக்கையாளர் செலவழிப்பது போன்ற தரவுகளை சேகரிப்பதில் அரசியல் தலையீடு உள்ளதாகவும் மக்கள் நம்பும் நிலையில், இந்த அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதில் தமக்கு நம்பிக்கை அற்றுப்போனதாகவும் சி.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Next Story