வெளிநாட்டவர்களை குறிவைக்கிறாரா நித்தியானந்தா..?
இன்று என்ன புது புகார் என செய்திகளை தேடும் அளவிற்கு நித்யானந்தா மீதான சர்ச்சைகள் தினம் தினம் அணிவகுத்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக அவரது ஆசிரமத்தில் நிர்வாகிகளாக இருந்த வெளிநாட்டவர்கள் அடுத்தடுத்து அவர் மீது பகீர் புகார்களை எழுப்பி வருவது பரபரப்பின் உச்சமாக உள்ளது
தியானம், யோகா என எதை எடுத்துக் கொண்டாலும் நம்மவர்களுக்கு நிகராக வெளிநாட்டவர்கள் ஆர்வம் காட்டுவதுண்டு. அதுமட்டுமின்றி ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர்களை குறி வைத்து வெளிநாடுகளில் தியான வகுப்புகள் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் நித்யானந்தா. அவரின் இந்த தியான வகுப்புகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிரசித்தம். வருடத்திற்கு இத்தனை நாட்கள் என இதுபோன்ற நாடுகளுக்கு செல்லும் நித்தியானந்தாவை தேடி ஏராளமான பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.
இதுபோன்ற தியான வகுப்புகளில் ஈர்க்கப்பட்டு நித்யானந்தா ஆசிரமத்திற்குள் நுழைந்தவர் தான் சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே. கனடா நாட்டை சேர்ந்த இவர் 2015ல் ஆசிரமத்தில் சிஷ்யையாக நுழைந்து பின்னர் அங்கு முக்கியமான ஒரு பொறுப்புக்கு உயர்ந்தார். நித்தியானந்தா மற்றும் ஆசிரமத்தின் சமூக வலைத்தளங்களை கவனித்து வந்த அவர், அங்கு முறைகேடுகள் நடப்பதாக கூறி ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஹரன் சிங்கம் என்பவரும் நித்யானந்தா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். நித்யானந்தாவின் மீதான ஈர்ப்பால் தன் சொத்துகளை எல்லாம் விற்று பிடதியில் சேர்ந்ததாக கூறுகிறார் ஹரன் சிங்கம். ஆனால் நன்கொடை வாங்க சொல்லி தங்களை எல்லாம் நித்யானந்தா துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
நள்ளிரவில் எழுப்பி நகைகளை எல்லாம் அணிந்து கொள்ள சொல்லி ஆசிரமம் குறித்தும் தன்னை பற்றியும் புகழ்ந்து பேச தாங்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் ஹரன் சிங்கம் கூறியிருப்பது பகீர் புகார் ரகம். இதேபோல் ஆசிரமத்துக்கு வருவோரை வசியம் செய்யும் வகையிலான பணி தனக்கு வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் பலரின் சொத்துகளை நித்தியானந்தா ஏமாற்றி வாங்கியதாகவும் அவர் அதிரடியை கிளப்பியிருக்கிறார்.
இதுமட்டுமில்லாமல் அடுத்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ்ஸி கே இன்டிக்கா. தன்னுடைய குடும்ப பிரச்சினைகளால் தியான வகுப்புகளை தேடி வந்தவர் தன்னுடைய சொத்துகளை எல்லாம் இழந்து நிற்கிறாராம். 24 லட்ச ரூபாயை மொத்தமாக நித்யானந்தாவிடம் பறிகொடுத்து விட்டு இன்று புலம்பித் தவித்து புகார் அளித்திருக்கிறார் கிரிஸ்ஸி... ஆனால் ஆசிரம நிர்வாகத்திடம் பணம் கொட்டிக் கிடக்கும் நிலையில் தியான வகுப்புகளுக்காக பணத்தை வசூலிப்பதில் கில்லாடியாக இருக்கிறாராம் நித்யானந்தா.
வெளிநாடுகளில் நடக்கும் தியான வகுப்புகளில் கலந்து கொள்ள குறைந்தது 15 லட்ச ரூபாய் முதல் அதிக பட்சமாக 30 லட்ச ரூபாய் வரை கட்டணமாம். இதுபோல் பணத்தை வாரி இறைக்க வெளிநாட்டவர்கள் தயாராக இருப்பதால் அவர்களை குறிவைத்தே மோசடிகள் நடத்த திட்டமிட்டுள்ளார் நித்யானந்தா என்ற பேச்சும் உள்ளது. ஈக்வடார் நாட்டுக்கு அருகே ஒரு தனித் தீவை விலைக்கு வாங்கியுள்ள அவர், அதை விரைவில் இந்துக்களுக்கான ஒரு தீவாக மாற்ற முயற்சிப்பதாகவும் கூறியிருக்கிறார் ஆசிரம முன்னாள் நிர்வாகியான ஜனார்த்தன ஷர்மா. பண மோசடி புகார் ஒரு பக்கம், பாலியல் தொல்லை, ஆள் கடத்தல் என அடுத்தடுத்த புகார்கள் வெளிவரும் நிலையில், இதை எல்லாம் கால பைரவர் துணையோடு எதிர்கொள்வேன் என விளக்கம் அளித்திருக்கிறார் நித்யானந்தா.
பொய்யாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அதுவாக மறையும் என்றும், சட்டப்படி எதையும் எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா. புகார்கள் ஒரு பக்கம் இருப்பினும் தினமும் யூட்யூபில் வந்து ஆன்மீக வகுப்புகளை எடுத்து வரும் அவர், தான் எங்கே இருக்கிறேன் என்பதை இதுவரை விளக்கவில்லை. நித்யானந்தா வெளியே வந்தால் தான் அவர் மீதான புகார்களின் உண்மைத் தன்மையும் வெளிவரும்.
Next Story