17 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்த விவகாரம் : சபாநாயகர் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் 17 பேரை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் 17 பேரை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனை தொடர்ந்து அந்த 17 சட்டமன்ற உறுப்பினர்களையும், சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 17 எம்.எல்.ஏ-க்களும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 17 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகிய விதம் ஏற்புடையது அல்ல என்றும், இது இருதரப்புக்கும் பொருந்தும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனம் சபாநாயகர்களுக்கு வழங்கியுள்ள உரிமையை மீறி, பெரும்பாலானோர் செயல்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பை வழங்குவதாக, நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். சபாநாயகர்களின் இத்தகைய நடவடிக்கையால், மக்களுக்கு நிலையான அரசு அமையாமல் போவதாகவும், நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. 15-வது சட்டப் பேரவை முழுவதும் தகுதி நீக்கம் தொடரும் என பேரவைத் தலைவர் உத்தரவிட முடியாது எனவும், பேரவைக் காலம் நிறைவடையும் வரை எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலிக்க உரிய அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வழக்கிலும் ராஜினாமா கடிதங்களின் செல்லுபடி தன்மை மாறுபடும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 2025 ஆம் ஆண்டு வரை போட்டியிட 17 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் விதித்த தடையை, உச்சநீதிமன்றம் ரத்து செய்ததன் மூலம் மீண்டும் அவர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story