வாட்ஸ்ஆப், கூகுள் பாதுகாப்பானதா?
வாட்ஸ்ஆப், கூகுள் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதனை உள்நாட்டிலேயே சேமித்து வைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப், கூகுள் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதனை உள்நாட்டிலேயே சேமித்து வைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தகவல்கள்... ஆம் அதுதான் சர்வதேச சந்தையில் தற்போது மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறது... நமக்கு செல்போன்களில் வரும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளே அதற்கு சான்று... தகவல்கள் தான் தற்போது, மிகப்பெரிய சொத்து என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதனை கட்டுப்படுத்துபவரே உலகையும் கட்டுப்படுத்துவார் என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தகவல்கள் தான், இனி புதிய எண்ணெய் வளம் என்றும், அதனை சர்வதேச நிறுவனங்கள் கட்டுப்படுத்த அனுமதிக் கூடாது எனவும் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், வாட்ஸ்ஆப், கூகுள் உள்ளிட்டவற்றில் சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை முறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பன்னாட்டு சமூக வலைதள நிறுவனங்களில் கொடுக்கப்படும் தகவல்கள் அமெரிக்காவில் உள்ள சர்வரிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தகம் மற்றும் இதர விஷங்களில் முரண்பாடு ஏற்பட்டால் இந்த தகவல்களை இந்திய அரசால் பெற முடியாது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் அதனை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், அதற்கு அமெரிக்க அரசின் அனுமதியை பெறவேண்டி இருக்கும்.
இதுபோன்ற விஷயங்களை எதிர்கொள்ளும் நோக்கில் பணப்பரிவர்த்தனை தகவல்கள் இ்ந்திய எல்லைக்குள் சேமிக்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனையடுத்து தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு மசோதா கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியர்களின் தகவல்களின் பிரதி ஒன்றை இந்தியாவில் சேமித்து வைக்கும்படி கிருஷ்ணா கமிட்டி மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு மசோதா வலியுறுத்துகின்றன. தகவல்கள் பாதுகாப்பு குறித்து இந்தியா முன்னெடுக்கும் இது போன்ற முயற்சிகளால் அமெரிக்க பெரு நிறுவனங்களின் ஏகபோகம் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து வாட்ஆப், கூகுள், பேஸ்புக், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தகவல்களை உள்நாட்டில் சேமிக்கப்படும் சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன. உலக மக்களின் தகவல்கள் ஒரு சிலரிடம் மட்டும் முழுமையாக இருக்கும் பட்சத்தில் அது, தகவல்களின் காலனியாதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால் தகவல்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இந்தியா முழு வீச்சில் இறங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி சாதனங்கள் சமூக வலைதளத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அதனால் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் சந்தையை கைப்பற்ற அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விரித்துள்ள வலையில் இந்தியா சிக்காது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
Next Story