மத்திய பிரதேசம் : அரசியல்வாதிகள், உயரதிகாரிகளை 'பிளாக்மெயில்' செய்து மோசடி - கோடிக்கணக்கில் பணம் பறிப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளை ஏமாற்றி மிக பெரிய பாலியல் மோசடி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் விஐபிகளிடம் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவேன் மிரட்டி பணம் வசூல் செய்யும் காட்சிகள் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், விஐபி.க்களை குறி வைத்து ஒரு கும்பல் பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்த இளம்பெண்கள் உதவி கேட்பது போல் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளை நாடியுள்ளதுடன், அவர்களுடன் அந்தரங்கமாகவும் இருந்துள்ளனர். அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த அந்த மர்ம கும்பல், அதனை காட்டி 'பிளாக்மெயில்' செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.
இந்த பாலியல் மோசடி வலையில் சிக்கிய அரசு பொறியாளர் ஒருவர், அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இது தொடர்பாக 5 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களுடைய வீடுகளில் சோதனையிட்டபோது, மடிக்கணினி மற்றும் செல்போன்களில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள், வீடியோக்கள் மற்றும் உரையாடல் பதிவை கைப்பற்றியுள்ளனர். அவற்றில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உயரதிகாரிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாலியல் மோசடி கும்பலிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஐபி.க்களின் மொபைல் எண்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சில வெளியில் கசித்துவிட்டதாக கூறப்படும் நிலையில்,நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகளில் விஐபி.க்களுடன் அந்தப் பெண்கள் அந்தரங்கமாக இருந்துள்ள வீடியோக்களை வெளியில் கசியாமல் இருக்க உறுதி செய்வதுதான் தங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பெரும் சவால் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சுயநலத்திற்காக தங்களது அதிகாரங்களை பயன்படுத்தும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பாலியல் கும்பலிடம் மாட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இரு தரப்பினருமே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story