கர்நாடகா : நீரில் மூழ்கி 6 சிறுவர், சிறுமிகள் உயிரிழப்பு - விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது பரிதாபம்
விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்-சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், மரதகட்டா கிராமத்தை சேர்ந்த வைஷ்ணவி, ரோகித், தேஜா ஸ்ரீ உள்ளிட்ட 6 சிறுவர், சிறுமிகள், விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, விநாயகர் சிலைகள், ஏரிகளில், கரைக்கப்பட்டு வந்தது. இதனை கண்ட சிறுவர்கள், களிமண் எடுத்து விநாயகர் சிலைகளை செய்து வழிபட்டனர். பின்னர் ஏரியில் இறங்கி களிமண்ணால் செய்யப்பட்ட சிலையை கரைக்க முயன்றனர். அந்த சமயத்தில் வைஷ்ணவி, ரோகித், தேஜாஸ்ரீ, ரக்ஷித், தனுஷ், வீணா ஆகிய 6 பேரும் ஏரியில் உள்ள சேற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 6 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோலார் தங்க வயல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆண்டர்சன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 6 சிறுவர், சிறுமிகள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர், சிறுமிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் 2 லட்ச ரூபாய் நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கும் இந்த தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story