நிலவில் தரையிறங்கும் போது சிக்னல் துண்டிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
நிலவில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் திட்டமிட்டபடி நிலவை நெருங்கியது. அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நள்ளிரவு திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் தரையிறக்கும் பணிகளை தொடங்கியது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் ஏராளமான விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை கண்காணித்து வந்தனர்.சந்திரயான்-2 நிலவில் தடம் பதிப்பதை காண பிரதமர் மோடி நேற்றிரவு பெங்களூரு வந்தார். செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற பிரதமரை இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சியை நேரில் பார்த்த பிரதமர், அது குறித்த விவரங்களை விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார். திட்டமிட்டபடி நேற்று நள்ளிரவு ஒன்றரை மணிக்கு நிலவில் தரையிரங்க தொடங்கிய விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் துல்லியமாக இருந்தன. 35 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த போது நிலவின் தென்பகுதியை நோக்கி தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு அதை மெதுவாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 35 கிலோ மீட்டரிலிருந்து படிப்படிப்படியாக நிலவை நோக்கி தரையிரங்கிய விக்ரம் லேண்டர் இறுதி கட்டத்தை எட்டும் நிலையில் திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது .இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.ஆனாலும் பலன் ஏதும் அளிக்கவில்லை . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரின் சிக்னலை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
Next Story