ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு - ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
ப. சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 21 ஆம் தேதி கைது செய்த சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் திங்கட்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வு முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா செவ்வாய்கிழமை வரை, சிபிஐ காவல் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ப. சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினால், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவரது மனு பலனற்றதாகிவிடும் என கபில் சிபல் வாதிட்டார்.
சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டால், இடைக்கால ஜாமினுக்கான தேவை என்ன? என்று, துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார்.
சாதாரண நபர் இது போன்ற கோரிக்கையை முன் வைக்கமாட்டார் என்றும் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
சாதாரண நபரிடம் இது போன்று சிபிஐ நடந்து கொண்டிருக்காது என, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இதற்கு பதிலடி கொடுத்தார்.
இதற்கு சாதாரண நபர் இதுபோன்ற குற்றத்தை செய்திருக்கமாட்டார் என்றும் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை, செவ்வாய்கிழமை வரை நீட்டியுங்கள் என்றும் துஷார் மேத்தா மீண்டும் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து இடைக்கால ஜாமின் தொடர்பாக வாதாட விரும்புவதாக கபில் சிபல் குறிப்பிட்டார்.
இதனிடையே, ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமின் மனுவை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா? - என நீதிபதி அஜய் குமார் குஹார் கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து இரு தரப்பு தெரிவிக்கும் கருத்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், நீதிபதி அஜய் குமார் குஹார் கருத்து தெரிவித்தார்.
முடிவில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹார், செவ்வாய்கிழமை வரை, ப. சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இடைக்கால ஜாமின் மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story