2 தினங்களில் ரூ.29 ஆயிரம் கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி
இரண்டே தினங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர குழு கூட்டத்தில், மூன்று முக்கிய அறிவிப்புகளை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். அடுத்த 18 மாதங்களுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, கடன் இல்லாத நிறுவனமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். இதன் முதல் படியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆயில் டூ கெமிக்கல் பிரிவில் 20 சதவிகித பங்குகளை சவுதி அராம்கோ நிறுவனத்திடம் விற்பதாக அறிவித்தார். மேலும் ஜியோ பைபர் நிறுவனம், அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த மூன்று அறிவிப்புகளை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, பெரும் உயர்வை கண்டது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ஆயிரத்து 162 ஆக இருந்த நிலையில், புதன்கிழமை வர்த்தக நேர முடிவின் போது, ஆயிரத்து 288 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டே தினங்களில் 28 ஆயிரத்து 684 கோடி அதிகரித்துள்ளது. புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, 49 புள்ளி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 13ஆவது பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story