கர்நாடகா, ஆந்திரா, வடமாநிலங்களில் தொடரும் கனமழை : ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- போக்குவரத்து பாதிப்பு
கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கர்நாடகாவின் வடக்கு பகுதிகளில் தொடரும் கனமழையால், குடகு, பெலகாவி, சிவமோஹா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், புனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடகு மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஸ்ரீகாகுளம்
இதேபோல, கனமழையால், ஆந்திரா- ஒடிசா எல்லைப்பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வம்சதாரா, நாகவள்ளி ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரத்தில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஒடிசா
ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மக்கள், அபாயகரமான முறையில், கயிற்றை கொண்டு வெள்ளத்தை கடந்து செல்கின்றனர். கலகண்டி, மால்காங்கிரி மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கெண்டுகுடா என்ற கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இரண்டு கர்ப்பிணிகள், இரு குழந்தைகள் என 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கஜபதி என்ற பகுதியில் தரைக்கு மேல் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கி தவித்த 650 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராய்பூர்
இதேபோல, சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரிலும், பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
Next Story