சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்...
சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தை இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று காலை 6 மணி 51 நிமிடத்தில் தொடங்கியது. கவுன்ட்டவுன் இறுதிக்கட்டத்தை எட்ட இருந்த நிலையில், சந்திரயான் 2-ஐ தாங்கி செல்ல தயாராக இருந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 க்ரையோஜினிக் எஞ்சினுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்றது. சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் பாய 56 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், கவுன்ட்டவுனை இஸ்ரோ திடீரென நிறுத்தியது. இந்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருந்த நிலையில் ஏவுகணையில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கையால் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2-ஐ வேறொரு நாளில் விண்ணில் செலுத்த இருப்பதாகவும், அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட இருந்தது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்பட திட்டமிடப்பட்டது. பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6-ஆம் தேதி நிலாவை சந்திரயான் 2 விண்கலம் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
"சந்திரயான்-2 நிறுத்தம் - சிறு பிரச்சினையே காரணம்" - விஞ்ஞானி நம்பி நாராயணன்
Next Story