சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்த மகாராஷ்டிர அரசு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய் தத்துக்கு, சிறை விடுப்பு அளித்ததுடன், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மகாராஷ்டிர அரசு முன்கூட்டியே விடுதலை அளித்துள்ளது பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 மாதம் சிறை விடுப்பை அம்மாநில அரசு அளித்தது. அந்த சிறைவிடுப்பை தண்டனை காலமாக கருதியதுடன், அவருக்கு 8 மாத காலம் தண்டனை கழிவு வழங்கி, சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசு முன்கூட்டியே விடுதலையும் செய்துள்ளது. இது பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனு மூலம் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பிரிவுகளில் தண்டனை பெற்றிருந்தால், அதுபோன்ற வழக்குகளில் ஒருநாள் தண்டனை கழிவு வழங்க கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பின்னரும், 2016 பிப்ரவரி 25 ஆம் தேதி சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை மகாராஷ்டிர மாநில எரவாடா சிறை மேல்முறையீட்டு தகவல் அலுவலர் ஒப்புக் கொண்டு ஆவணங்களை அளித்துள்ளார். தண்டனை காலத்திற்கு முன்பே சஞ்சய் தத் மட்டும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது, இந்தியாவில் தற்போது நிலவி வரும் சட்ட பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் தத்தை மகாராஷ்டிர அரசு விடுதலை செய்தது போல தமிழக அரசும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே பேரறிவாளன் தரப்பு கோரிக்கையாக உள்ளது.
Next Story