இந்தியா பதிலடி தாக்குதல் : தலைவர்கள் வாழ்த்து
இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.
"பயங்கரவாதத்திற்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு
பயங்கரவாதத்திற்கு எதிராக துணிச்சலான நடவடிக்கையை இந்திய விமானப்படை எடுத்துள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து, அதை வேரோடு அழிப்பதற்கு எடுத்திடும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி, வெற்றிகள் பல கண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாடு காரணமாக, இன்றைய தினம் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு, தமிழக மக்கள் சார்பாக தனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய விமானப்படை செயல் பெருமைக்குரியது" - ஸ்டாலின்
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்களை அழித்த நமது இந்திய விமானப்படை விமானிகளின் செயல் பெருமைக்குரியது என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"இந்திய விமானப்படையை வணங்குகிறேன்"- ராகுல்
இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து, சமூகவலைதளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய விமானப்படை விமானிகளை வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"ராணுவத்தின் வலு மற்றும் திறமை வெளிகாட்டும் நேரம் இது" -பிரகாஷ் ஐவடேகர்
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், ராணுவத்தின் வலு மற்றும் திறமை வெளிகாட்டும் நேரம் இது என்றும் பிரகாஷ் ஐவடேகர் கூறினார்.
"இந்திய விமானப்படைக்கு பாராட்டு" - கெஜ்ரிவால்
இந்திய விமானப்படை வீரர்களின் துணிச்சலான நடவடிக்கையை பாராட்டுவதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட தகவலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story